சென்னை: பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரித்துள்ள ‘இறுகப்பற்று’ படம், வரும் அக்டோபர் 6ம் தேதியன்று திரைக்கு வருகிறது. வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, ஸ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா அய்யப் பன் நடித்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரகாரன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து தன்னை நீக்க முயற்சித்ததாக அபர்ணதி கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இதில் விதார்த் மனைவியாக நடிக்கும் கேரக்டருக்காக, என் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று டைரக்டர் யுவராஜ் தயாளன் சொன்னார்.
இது சாதாரணமான விஷயம்தானே என்று நினைத்து, என் உடல் எடையை அதிகரிக்க ஆரம்பித்தேன். ஆனால், மூன்று மாதங்களாகியும் என்னால் அவர் சொன்ன அளவுக்கு உடல் எடையை அதிகரிக்கவே முடியவில்லை. எனவே, இந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று சொல்லி, இப்படத்தில் இருந்து என்னை நீக்க முயற்சி செய்தார். அப்போது சரியான ஒரு டயட்டீஷியனை விதார்த் எனக்கு அறிமுகம் செய்தார். பிறகு அவரது ஆலோசனைப்படி எனது உடல் எடையை அதிகரித்தேன். இப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம், விதார்த். தற்போது திரையில் என்னைப் பார்க்கும் போது, அவர் சொல்லும் ஒரு வசனம் சரிதான் என்று தோன்றுகிறது.