சென்னை: ஏற்கனவே 2 முறை விவாகரத்து செய்த நடிகை மீரா வாசுதேவன், தற்போது 3வது முறையாக திருமணம் செய்துகொண்ட தகவல் திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழில் 2003ல் வெளியான ‘உன்னைச் சரணடைந்தேன்’ படத்தில் அறிமுகமான மீரா வாசுதேவன், தொடர்ந்து ‘ஜெர்ரி’, ‘கத்திக் கப்பல்’, ‘ஆட்டநாயகன்’, ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, ‘அடங்க மறு’ ஆகிய படங்களில் நடித்தார். தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தார். ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். 2005ல் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகனும், இயக்குனருமான விஷால் அகர்வால் என்பவரை மீரா வாசுதேவன் காதல் திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2010ல் அவர்கள் விவாகரத்து மூலம் பிரிந்தனர். 2012ல் வில்லன் நடிகர் ஜான் கொக்கேனை மீரா வாசுதேவன் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2016ல் ஜான் கொக்கேனும், மீரா வாசுதேவனும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பிறகு ‘சார்பட்டா பரம்பரை’ மூலம் பிரபலமான ஜான் கொக்கேன், நடிகை பூஜை ராமச்சந்திரனை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், மீரா வாசுதேவன் 3வது காதல் திருமணம் செய்துகொண்டார். ஒளிப்பதிவாளர் விபினுக்கும், மீரா வாசுதேவனுக்கும் திருமணம் நடந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மீரா வாசுதேவன் வெளியிட்ட பதிவில், ‘நானும், விபினும் கோவையில் கடந்த 21ம் தேதி திருமணம் செய்துகொண்டோம். பாலக்காட்டை சேர்ந்த விபினும், நானும் 2019ல் இருந்து இணைந்து பணியாற்றி வருகிறோம். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்றாகவே பார்த்து வருகிறோம். எங்கள் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதை என் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். விபினும், மீரா வாசுதேவனும் மலையாளத்தில் டி.வி தொடரில் பணியாற்றி வருகின்றனர். அப்போது ஏற்பட்ட நட்பு காதலாகி, இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. மீரா வாசுதேவனுக்கு தற்போது 42 வயதாகிறது. இந்த வயதில் அவர் தன்னை விட 6 வயது குறைந்த விபினை திருமணம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.