சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் படத்தை இயக்க உள்ளார். விஜய், சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி படிப்பு முடித்த பிறகு கனடா சென்ற இவர், அங்கு திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் சினிமா டெக்னிக்கல் தொடர்பான படிப்புகளை படித்து வந்தார். பிறகு ஆங்கிலத்தில் குறும்படங்களையும் இயக்கினார். ஜேசன் சஞ்சய்க்கு சிறு வயது முதலே டைரக்ஷன் ஆசை இருந்தது. அவர் வளர்ந்ததும் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார். ஆனாலும் அவரும் தனது அப்பாவைப் போலவே ஹீரோ ஆகிவிடுவார் என தமிழ் சினிமாவினர் கணித்து வந்தனர். ஆனால் அவர்களின் கூற்று இப்போது பொய்யாகியுள்ளது. தனது விருப்பப்படியே டைரக்ஷன் துறையை தேர்வு ெசய்திருக்கிறார் ஜேசன்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை கதை, திரைக்கதை எழுதி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இது குறித்து ஜேசன் கூறும்போது, ‘இயக்குனராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ, ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள், பிற டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது’ என்றார். தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கூறுகையில், ‘விஜய்யின் மகனை அறிமுகப்படுத்துவது சந்தோஷமாக உள்ளது. அவர் சொன்ன கதை எங்களுக்கு பிடித்திருந்தது’ என்றார்.