சென்னை: பிரபு தேவா, மடோனா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை வெங்கட் பிரபு முன்பு வெளியிட்டார். தமிழில், ‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘காதல் கிறுக்கன்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘வியாபாரி’ போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் அடுத்ததாக இயக்கும் இப்படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். படத்தை ராஜன் மற்றும் நீலா தயாரிக்க டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது. விநாயக மூர்த்தி இசையமைக்கும் படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டிரெய்லரில், ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு 4 பெண்கள் செய்யும் கலாட்டாக்கள்தான் கதையாக இந்த டிரெய்லரில் சொல்லப்படுகிறது. இதில் பிணமாக பிரபுதேவா நடித்துள்ளார். மடோனா, அபிராமி, யாஷிகா உள்ளிட்டோர் அந்த பிணத்தை சுமந்து கொண்டு பல இடங்களுக்கு செல்கிறார்கள். இதை காமெடி கலந்த விதத்தில் கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லும்படியாக இந்த படம் உருவாகியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.