சென்னை: நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இயங்கி வரும் விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது ‘ராட்சசன்’ படத்தின் 2வது பாகம் என்று கூறப்படுகிறது. ஆனால், இயக்குனர் அதை உறுதி செய்யவில்லை. ஹீரோயினாக ‘பிரேமலு’, ‘ரெபல்’ ஆகிய படங்களில் நடித்திருந்த மலையாள நடிகை மமிதா பைஜு நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஷ்ணு விஷால் வெளியிட்டார்.
அடுத்து அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால், படத்தை அவரே தயாரிக்கிறார். பாடகர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார். பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கினார். அடுத்து ஜெய், மாஸ்டர் மகேந்திரன் நடித்த ‘லேபில்’ என்ற வெப்தொடரை இயக்கினார். இதையடுத்து அவர், விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை எழுதி இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.