சென்னை: சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ‘96’ பிரேம் குமார் எழுதி இயக்கிய ‘மெய்யழகன்’ படம் ஹிட்டாகியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் ஹீரோ கார்த்தி பேசியதாவது: திரையுலக ஜாம்பவான்கள் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் ஆகியோருக்கு நன்றி. காரணம், குடும்ப உறவுகளை மையப்படுத்தி பல கதைகளை அவர்கள் கொடுத்திருந்தனர். அதுபோல் ஒரு படம் வராதா என்று ஏங்கியபோது, பிரேம் குமார் சொன்ன கதை எனக்குப் பிடித்தது. அண்ணன் சூர்யா என்னிடம், ‘உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு’ என்று சொல்வார்.
அப்படி இருந்தால்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பு செலுத்த முடியும். பிரேம் குமார் வரலாற்றுக்கதை எழுதியுள்ளார். அதைப் படித்ததும், ‘யாருய்யா நீ’ என்று கேட்கும் அளவுக்கு அவரிடம் உரிமை வந்துவிட்டது. அதை எப்போது படமாக்குவார் என்று காத்திருக்கிறேன். இவ்வாறு கார்த்தி பேசினார். அரவிந்த்சாமி, தேவதர்ஷினி, பிரேம் குமார், ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், சுப, கார்த்திக் நேத்தா, உமா தேவி, சக்திவேலன் கலந்துகொண்டனர்.