சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் முழுவீச்சில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் தயாராகி வரும் பிராஜக்ட் கே என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் கமல்ஹாசன் தனது 234-வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பின் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய உள்ள இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ப்ரமோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ப்ரமோவுக்கான ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. தற்போது கமல், மணிரத்னம் இணையும் கமல் 234 படத்தில் நயன்தாரா நடிக்கும் பட்சத்தில் கமலுடன் நயன்தாரா இணையும் முதல் படமாக இருக்கும்.