சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வரும் நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி, திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் தொடர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு (Joint Action Committee ) சேர்ந்து எடுத்த தீர்மானத்திற்கு தாங்கள் (நடிகர் சங்கம்) கண்டனம் தெரிவித்து உள்ளீர்கள். இன்றைய சூழலில் முதல் போடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்து, திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது.
ஆகையால் தான் கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு அந்த வரிசைப்படி தான் நடித்துக் கொடுப்பது காலம் காலமாக இருந்து வருவது மரபு. அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்துக் கொடுக்காமல், மற்றவர்களுக்கு நடித்துக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கையை தவறானது கண்டனத்துக்குரியது என்று தெனிந்திய நடிகர் சங்கம் கூறி இருப்பதை வாபஸ் பெற வேண்டும்.