திருவனந்தபுரம்: மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ள பாமா, தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘சேவற்கொடி’, ‘ராமானுஜன்’, ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும், மலையாள சில டி.வி தொடர்களில் நடித்திருக்கும் அவர், பின்னணி பாடகியும் கூட. கடந்த 2020ல் அருண் ஜெகதீஷ் என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கவுரி என்ற மகள் இருக்கிறார். கடந்த மே மாதம் தனது மகளின் போட்டோ ஒன்றை வெளியிட்ட பாமா, தனிப்பட்ட காரணத்தால் தன் கணவரை விட்டுப் பிரிவதாக பதிவு வெளியிட்டு, ‘இனி நான் சிங்கிள் மதர்’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில், திருமணம் குறித்து பாமா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெண்களாகிய நமக்கு திருமணம் என்பது தேவையா? வேண்டவே வேண்டாம். தங்கள் பணத்தைக் கொடுத்து எந்தவொரு பெண்ணும் திருமணம் செய்துகொள்ளக்
கூடாது. உங்களை கைவிட்டுவிட்டால் என்ன ஆகும்? உங்கள் பணத்தைப் பறித்துக்கொண்டு தற்கொலைக்குதான் தள்ளிவிடுவார்கள். உங்கள் வாழ்க்கைக்குள் வருபவர் எப்படி நடத்துவார் என்ற தெரியாமல் ஒரு பெண் திருமணம் செய்யக்கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். பாமாவின் இக்கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானதால், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யக்கூடாது என்பதுகுறித்துதான் பேசினேன். பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று நான் சொல்லவே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.