14ம் நூற்றாண்டு கதையில் ரிச்சர்ட் ரிஷி
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் வழங்க, மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரெளபதி 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடந்து வரும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு ‘திரெளபதி 2’ காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூரில் முடிந்தது. இதுகுறித்து மோகன்.ஜி கூறுகையில், ‘படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குனர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக உருவாகும்.
தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்திக்கு நன்றி. திரைப்படம் மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்துகொள்வது என்று, எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்து, உயர்தரத்தில் படம் உருவாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்’ என்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் கதை கொண்ட இப்படத்தின் கதை, 14வது நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடக்கிறது. முக்கிய வேடங்களில் ரக்ஷனா இந்து சுதன், நட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், ‘நாடோடிகள்’ பரணி, சரவண சுப்பையா, வேல.ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் நடித்துள்ளனர். பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைக்க, பிலிப் ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.