மணிரத்னத்தை வியக்க வைத்த ‘18 மைல்ஸ்’
உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள ‘18 மைல்ஸ்’ என்ற படத்தை ‘பேச்சுலர்’ சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ளார். அசோக் செல்வன், மிர்னா மேனன் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து 14 நிமிடங்கள் ஓடும் புரோலாக்கை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை கூடுதலாக்கி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து வியந்த இயக்குனர் மணிரத்னம், படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சதீஷ் செல்வகுமார் கூறுகையில்,
‘மணிரத்னத்தின் பாராட்டு எங்கள் அணியிலுள்ள அனைவருக்கும் மறக்க முடியாத வெகுமதியாக மாறியுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக்கை திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. மிக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததாக மணிரத்னம் பாராட்டினார். மிர்னா மேனன், எனது உதவியாளர் அசோக், எடிட்டர் நாஷ் ஆகியோரை தனித்தனியாக பாராட்டி வாழ்த்தினார்.
அணியில் ஒவ்வொருவரின் உழைப்பும் சிறப்பாக இருந்ததாக சொன்னார். எங்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்த் எங்களை உற்சாகப்படுத்தினார்’ என்றார். மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படம், ஒரு இயக்குனராக தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று சொன்ன சதீஷ் செல்வகுமார், கடல் மற்றும் எல்லைகளை கடந்த உணர்வுகளை ‘18 மைல்ஸ்’ படத்தில் அழகியலுடன் சொல்லியிருக்கிறார்.