40 வயதில் கடுப்பான காஜல் அகர்வால்
தற்போது 40 வயதை கடந்துவிட்ட காஜல் அகர்வால், இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 2004ல் திரையுலகிற்கு வந்த அவர், தற்போது 21 வருடங்களை நிறைவு செய்துள்ளார். முன்னணி நடிகை என்ற அந்தஸ்து அவரை விட்டு விலகிய நிலையில், தனது நீண்ட நாள் நண்பரும், காதலருமான மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு என்பவரை கடந்த 2020ல் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் சென்ற அவர், பிறகு நீல் கிட்ச்லு என்ற மகனுக்கு தாயானார். சில காலம் நடிக்காமல் இருந்த அவர், தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து, மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது.
இன்றுள்ள புது நடிகைகளின் பலத்த போட்டிக்கு மத்தியில், தனது பழைய இடத்தை காஜல் அகர்வால் பிடிக்க முடியாமல் அவதிப்படுகிறார். கைவசம் இந்தியில் ‘ராமாயணா 1’, ‘ராமாயணா 2’, ‘தி இந்தியா ஸ்டோரி’, தமிழில் ‘இந்தியன் 3’ ஆகிய படங்கள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற காஜல் அகர்வாலிடம், ‘40 வயதை கடந்துள்ள நிலையில், மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்துள்ளதற்கு வாழ்த்துகள்’ என்று ஒருவர் கூறியுள்ளார். அதை கேட்டு கடுப்பான காஜல் அகர்வால், ‘40 வயதானால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. திறமைக்கு வயது தடை இல்லை. இனி இப்படி கேட்காதீர்கள்’ என்றார். ‘கேட்ட கேள்வி தவறு. அதற்கு காஜல் அகர்வால் பொறுமையிழந்து பேசியதும் தவறு’ என்று நெட்டிசன்கள் சொல்கின்றனர்.