42 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு; டி.ராஜேந்தர் அறிவிப்பு
சென்னை: இதுவரை டி.ராஜேந்தரின் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டது இல்லை. தற்போது அவர் டி.ஆர் டாக்கீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்தை அடுத்த மாதம் மறுவெளியீடு செய்கிறார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புதிய டிஜிட்டல் இசை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் 4கே முறையில் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன். இது 1983 மார்ச் 4ம் தேதி ரிலீசானது. கங்கா, நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெ.ஆ,மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்சபுளி செல்வராஜ், காந்திமதி ஆகியோருடன் நான் நடித்துள்ளேன்.
எனது படங்களான ‘மைதிலி என்னை காதலி’, ‘ஒருதலை ராகம்’, ‘என் தங்கை கல்யாணி’, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ மற்றும் ‘சரவணா’, பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ம ஆளு’, ‘மோனிஷா என் மோனலிசா’, ‘சொன்னால்தான் காதலா’ மற்றும் சிறுவனாக கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த ‘எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களையும் மீண்டும் டி.ஆர் டாக்கீஸ் வெளியிடுகிறது. தவிர, டி.ஆர் டாக்கீஸ் யூடியூப் சேனலாகவும் இயங்குகிறது. விரைவில் நான் இயக்கும் புதுப்படத்தின் அறிவிப்பு வெளியாகும். எனது படங்களில், ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இருக்கிறது.