யஷ் படத்துக்கு 45 நாட்கள் ஸ்டண்ட்
‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு யஷ் நடிக்கும் பான் இந்தியா மற்றும் ஆங்கில படம், ‘தி டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’. இதை மலையாள நடிகை கீது மோகன்தாஸ் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் 45 நாட்கள் படமாக்கப்படுகிறது. ‘ஜான் விக்’, ‘ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ்’, ‘டே ஷிஃப்ட்’ ஆகிய ஹாலிவுட் படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் ஜேஜே பெர்ரி, தற்போது இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர் கூறுகையில், ‘இந்திய படக்குழுவினர் உலகத்தரம் வாய்ந்தவர்கள்.
அதனால்தான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். எனது 35 வருட திரையுலக அனுபவத்தில் 39 நாடுகளில் பணியாற்றியுள்ளேன். ஆனால், நான் இந்திய சினிமாவின் தீவிர ரசிகன். இங்குள்ள படைப்பாற்றல் கலைநயம் மிகுந்தது, மிகவும் துணிச்சலானது. இயக்குனர் கீது மோகன்தாஸின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஹாலிவுட்டில் இருந்து வந்துள்ள நான், இந்திய கதையில் பணியாற்றுவது உற்சாகத்தை கொடுக்கிறது. இப்படத்தில் புதிதாக ஒரு ஸ்டண்ட் காட்சியை உருவாக்க விரும்புகிறேன்’ என்றார். இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.