கடந்த 6 மாதங்களில் 122 படங்களில் 114 படு தோல்வி
சென்னை: கடந்த 6 மாதங்களில் கோலிவுட்டில் வெளியான 122 படங்களில் 114 படங்கள் தோல்வி அடைந்துள்ளன. வெற்றி பெற்ற 8 படங்களில் 7 சிறு பட்ஜெட் படங்கள் ஆகும்.ஜனவரியில் வெளியான படங்களில் ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன. மற்ற படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின.
பிப்ரவரி மாதம் தான் தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆனது. அது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ தான். உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்தது. ஆனால் அது முழு பட்ஜெட்டில் பாதி கூட இல்லை. அஜித்துக்கு மட்டும் இந்த படத்துக்கு ரூ.110 கோடி சம்பளமாக தரப்பட்டது. பின்னர் காதலர் தினத்தன்று 9 படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த 9 படங்களும் தோல்வியை சந்தித்தன. வந்ததும் போனதும் தெரியாமல் போயின.
பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஒரு வெற்றிகூட கிடைக்காமல் தத்தளித்த கோலிவுட்டுக்கு பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் ஆறுதல் தந்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கிய அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்துக்கு போட்டியாக தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது.
மார்ச் மாதத்தில் கோலிவுட்டுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. ஏப்ரல் மாதம் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் ஆனது. குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்றாலும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.290 கோடி. அந்த வகையில் தயாரிப்பாளருக்கு இப்படம் லாபத்தை தரவில்லை. ஆனால் படத்தை வாங்கிய தமிழ்நாடு வினியோகஸ்தர்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.110 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்து கொடுத்தது.
கோடை விடுமுறை என்பதால் மே மாதத்தில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த மாதத்தில் மட்டும் 26 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் மே 1ம் தேதியே சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ மற்றும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் ‘ரெட்ரோ’ படம் வசூல் ஈட்டவில்லை. ஆனால் அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.88 கோடி வசூலித்துள்ளது.
அடுத்தபடியாக மே 16ம் தேதி திரைக்கு வந்த சூரியின் ‘மாமன்’ திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வெற்றி வாகை சூடியது. இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அதேபோல் மே மாத இறுதியில் திரைக்கு வந்த விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படமும் ஓடவில்லை.
ஜூன் மாதம் கோலிவுட்டுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கமல் - மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபீசில் சோபிக்கவில்லை. தனுஷின் ‘குபேரா’ படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனாலும் தமிழில் படுதோல்வியை சந்தித்தது.
மேலும் திரில்லர் படமான நவீன் சந்திரா நடித்த ‘லெவன்’, விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ஆகியவை சிறு பட்ஜெட்டில் உருவாகி, வினியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது. ‘லெவன்’ படம் ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்று சாதித்து வருகிறது. இந்த 6 மாதங்களில் 122 படங்கள் வெளியாகி, அதில் 8 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. 114 படங்கள் தோல்வி அடைந்துள்ளன.
தயாரிப்பாளர் தரப்பில் 1826 கோடி முதலீடு செய்யப்பட்டு, ரூ.1614 கோடி அவர்களுக்கு வருவாயாக கிடைத்திருக்கிறது. இதில் சிறு பட்ஜெட் படங்கள்தான் பெரிய அளவில் சாதித்து இருக்கின்றன. கடந்த 2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது, இந்த அரையாண்டு தமிழ் சினிமாவை பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றியுள்ளது என சொல்லலாம் என்கிறார்கள் திரைத்துறையை சேர்ந்த டிரேட் வல்லுநர்கள்.