தந்தைக்காக வருத்தப்படும் பிரியங்கா சோப்ரா
தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் அறிமுகமாகி, அதில் இமான் இசையில் ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை சொந்தக்குரலில் பாடியவர், முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. பிறகு பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும், வெப்தொடர்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறி, பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் அவர், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கிறார். இதில் அவர் ஏற்றுள்ள கேரக்டரின் பெயர், மந்தாகினி. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘எனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில், எப்படிப்பட்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால், எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டேன். நான் எவ்வளவு கடினமாக உழைத்தேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த பயணத்தில், எனது பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளை கூட கொண்டாடவில்லை. எனது குடும்பத்தினருடன் மிகவும் குறைவான நாட்களையே செலவழித்தேன். என் தந்தை மருத்துவமனையில் இருந்தபோது, அவரது கடைசி நாட்களில், அருகில் இருந்து அவரை கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் இருக்கிறது’ என்றார்.
