நடிப்புக்காக வேலையை இழந்த திரிப்தி
விஜய் ஆண்டனி நடித்துள்ள 25வது படம், ‘சக்தித் திருமகன்’. இதை ‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களின் இயக்குனர் அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தயாரித்து இசை அமைத்துள்ளார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 19ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அருண் பிரபு கூறுகையில், ‘இது மக்கள் சார்ந்த அரசியல் படம். நீங்கள் எந்த எதிர்பார்ப்பில் வந்தாலும், இது உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்’ என்றார். ஹீரோயின் திரிப்தி ரவீந்திரா கூறும்போது, ‘சென்னையில் இருக்கும்போது, என் வீட்டில் தங்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ‘சக்தித் திருமகன்’ தமிழில் எனக்கு முதல் படம். என்னை நம்பிய விஜய் ஆண்டனி, அருண் பிரபுவுக்கு நன்றி. ‘மருது’ பாடல் சிறப்பாக இருக்கிறது. இதுதான் எனது ரிங்டோன்.
தொடர்ந்து தமிழில் நடிப்பேன்’ என்றார். தமிழில் பேச சில மாதங்கள் தீவிர பயிற்சி பெற்றுள்ள திரிப்தி ரவீந்திரா, சில தமிழ் படங்களை பார்த்து நடிக்க கற்றுக்கொண்டார். மகாராஷ்டிரா குலே பகுதியை சேர்ந்த அவர், பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் அதிக சம்பளத்துக்கு பணியாற்றினார். கலையார்வம் காரணமாக அந்த வேலையை ராஜினாமா செய்தார். பிறகு புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் நடந்த ஆடிஷனில் பங்கேற்று தேர்வானார். இதையடுத்து மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடிக்க முயற்சித்த திரிப்தி ரவீந்திரா, இன்ஸ்டாகிராம் மூலம் தமிழில் நடிக்க தேர்வானார்.