இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நடிகர் கைது: நண்பரின் மனைவிக்கு வலை
மும்பை: டெல்லியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் அந்த 24 வயது இளம் பெண் வேலை பார்த்து வந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஆசிஷ் கபூரின் அறிமுகம் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்துள்ளது. ஆசிஷ் கபூர் இந்தி டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இருவரும் சாட்டிங் மூலம் பேசி பழகி வந்த நிலையில், ஆசிஷ் கபூர் தனது நண்பரின் வீட்டில் நடக்க உள்ள ஒரு பார்ட்டிக்கு வருமாறு அந்தப் பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பின் பேரில் அந்தப் பெண் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு, குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து மயக்கம் அடையச் செய்ததாகவும்,
அதன் பிறகு ஆஷிஷ் கபூர், அவரது நண்பர் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் கூறி, அப்பெண் டெல்லி சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதே நேரம் பார்ட்டியில் இருந்த மற்றொரு பெண் தன்னை தாக்கியதாகவும், நடந்த சம்பவத்தை அவர்கள் வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவான ஆஷிஷ் கபூரை புனேயில் வைத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர். இளம்பெண்ணை தாக்கிய நடிகரின் நண்பரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.