8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் நடிகை
வட இந்தியாவில் பிறந்தாலும் தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருபவர் லாவண்யா திரிபாதி. ‘அந்தாள ராட்சசி’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ‘மாயவன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாவாண்யா, நடிகர் வருண் தேஜ் என்பவரை கடந்த 2023ல் திருமணம் செய்தார்.
தற்போது மீண்டும் 8 வருடங்கள் கழித்து அதர்வா முரளியுடன் ‘தணல்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரித்துள்ள இப்படத்தை ரவீந்திர மாதவா இயக்கியுள்ளார். அஸ்வின் காகுமனு, ஷா ரா, லட்சுமி பிரியா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்து ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா பேசும்போது, ”நிறைய ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல் படத்தை உருவாக்கியுள்ளோம். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு இளைஞர்களை பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் குணத்தோடு இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இவர்களை சுற்றி கதை இருக்கும்” என்றார்.