ஹீரோவாக நடிக்கும் நடிகையின் தம்பி
புனித் ரங்கசாமி இயக்க, தருண் கிஷோர் சுதீர் தயாரித்துள்ள படம், ‘ஏழுமலை’. இதன் டைட்டில் டீசரை சிவராஜ்குமார் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். காதல் கதை கொண்ட இதில், நடிகை ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா, ‘மகாநதி’ பிரியங்கா ஆச்சார் ஜோடியாக நடித்துள்ளனர். மற்றும் ஜெகபதி பாபு, நாகபரணா, கிஷோர் குமார், சர்தார் சத்யா, ஜகப்பா நடித்துள்ளனர். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். கே.எம்.பிரகாஷ் எடிட்டிங் செய்ய, அட்லாண்டா நாகேந்திரா இணைந்து தயாரித்துள்ளார். நாகார்ஜூனா சர்மா, புனித் ரங்கசாமி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. கேரளா, தமிழ்நாடு எல்லை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படம் சம்பந்தமாக பெங்களூருவில் நடந்த விழாவில் பேசிய சிவராஜ்குமார், ‘இப்படத்தின் டீசர் அருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நல்லவர்களுக்கே நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி. ராண்ணா மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். பிரியங்காவை பார்க்க ஒரு புதியவரை போல் தெரியவில்லை. புதியவர்கள் வந்து சினிமாவை மாற்ற வேண்டும். மக்கள் பாராட்டினால் லாபம் தானாக வரும். அதுதான் எப்போதும் நடந்து வருகிறது’ என்றார். புனித் ரங்கசாமி பேசும்போது, ‘ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளது’ என்றார்.