நிர்வாகம் பொறுப்பல்ல: விமர்சனம்
தில்லாலங்கடி ஆசாமி கார்த்தீஸ்வரன், பொதுமக்களின் பேராசையை தூண்டி, அதிநவீன வழிகளில் மோசடியில் ஈடுபட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அந்த பணத்தை தனது குழுவினருக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு, தான் மட்டும் வெளிநாட்டில் செட்டிலாக நினைக்கிறார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். அவர் செய்த பலே, பலே மோசடிகள் என்ன? போலீஸ் மற்றும் சட்டத்தின் கண்ணில் மண்ணை தூவி எப்படி தப்பித்தார் என்பது மீதி கதை. இயக்குனர் எஸ்.கார்த்தீஸ்வரன் ஹீரோவாக நன்கு நடித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. மற்றும் லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், ஆதவன், அகல்யா வெங்கடேசன் ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர்.
ஒரு பாடலுக்கு அஸ்மிதா சிங் ஆடியிருக்கிறார். பாடல் காட்சியில் குளுமையை கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், மற்ற காட்சிகளை இயல்பு மீறாமல் படமாக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்களும், பின்னணி இசையும் கதையை நகர்த்த உதவியுள்ளன. எடிட்டர் சஜின்.சியின் கைவண்ணம் தனித்து தெரிகிறது. லாஜிக் பற்றி கவலைப்படாமல் எழுதி இயக்கியுள்ள எஸ்.கார்த்தீஸ்வரன், படம் முழுக்க மோசடி செய்துவிட்டு, இறுதியில் மோசடியில் இருந்து தப்பிக்க ஆலோசனை வழங்குவது நெருடுகிறது. திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
