மீண்டும் அஜித்தை இயக்கும் ஆதிக்
சென்னை: அஜித் குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது அஜித் குமார், திரிஷா நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இது வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசிய அஜித் குமார், ‘வெவ்வேறு ஜானர்களில் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் படம் இயக்குங்கள்.
கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும். ‘குட் பேட் அக்லி’ படம் உங்கள் ஸ்டைலிலேயே இருக்க வேண்டும். எதற்காகவும் சமரசம் செய்ய வேண்டாம். இக்கதையை நீங்கள் நினைத்தபடி படமாக்குங்கள்’ என்று அட்வைஸ் செய்துள்ளார். இந்நிலையில், அஜித் குமாரின் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்து, ‘ஸ்டைலான அஜித்தை காட்டியுள்ளீர்கள்’ என்று பாராட்டினர். அப்போது ஆதிக் ரவிச்சந்திரனிடம், ‘மீண்டும் அஜித் குமாரை இயக்குவீர்களா?’ என்று கேட்க, அதற்கு பதிலளித்த அவர், ‘மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால், அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது’ என்றார்.