கிசுகிசுவில் ஐஸ்வர்யா சிக்காத மர்மம்
போட்டோஷூட்டில் மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டார், ஐஸ்வர்யா மேனன். அவரது கிளாமர் வீடியோ மற்றும் போட்டோக்கள், அவர் பதிவு செய்த சில நிமிடங்களில் சோஷியல் மீடியாவில் வைரலாகின்றன. குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள அவர், கேரளாவிலுள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்தவர். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்து வளர்ந்தார். அங்கு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, மெட்ரிக் பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தார்.
‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிறகு எம்.எஸ்.ரமேஷ் இயக்கிய ‘தசாவல’ என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகி, பிரேம் ஜோடியாக நடித்தார். இதில் மனநலம் குன்றிய பெண்ணாக தோன்றிய அவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழில் ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். மலையாளத்தில் ‘மான்சூன் மேங்கோஸ்’, தெலுங்கில் ‘லவ் பெயிலியர்’ ஆகிய படங்களில் அறிமுகமானார். அவர் ஏன் கிசுகிசுக்களில் சிக்குவது இல்லை என்று கேட்டபோது, ‘எனக்கு சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கவும், ரீல்ஸ் பார்க்கவும் பிடிக்கும்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வீட்டில் என் அம்மா, அப்பா மற்றும் நாய்க்குட்டியுடன் இருப்பதால், நான் எந்த கிசுகிசுவிலும் சிக்குவது இல்லை. எனது நண்பர்கள் வெளியே கூப்பிட்டால் கூட செல்வது இல்லை. அவர்களே என்னை வீட்டில் வந்து பார்ப்பார்கள். அதனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்றார்.