அமிதாப் பச்சனுக்கு குரு பூர்ணிமா பூஜை: ரசிகர் குடும்பம் அசத்தல்
சென்னை: வட இந்தியாவில் குரு பூர்ணிமா என்ற பூஜை காலம் காலமாக நடந்து வருகிறது. அதன்படி தங்களது குருமார்கள், ஆசிரியர்கள், தங்களை நல்வழிப்படுத்தியவர்களை மரியாதை செய்வார்கள். அவர்கள் இறந்துபோயிருந்தால் வழிபாடும் செய்வார்கள். இந்த குரு பூர்ணிமா பூஜை தற்போது கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி, ம.பி, குஜராஜ் உள்பட வட மாநிலங்களில் இந்த பூஜையை இந்துக்கள் செய்தனர்.
இந்நிலையில் கொல்கத்தாவிலுள்ள பன்சிதர் பிதோய் என்பவரது வீட்டில் அமிதாப் பச்சனுக்கு குரு பூர்ணிமா பூஜையை செய்து அசர வைத்திருக்கிறார்கள். இதைப் பார்க்க அவர்களது அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் இருந்தவர்கள், உறவினர்கள் பலரும் கூடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அமிதாப் பச்சனின் உருவ சிலையை வைத்து வழிபாடு செய்து குரு பூர்ணிமாவை கொண்டாடினார்கள்.
இது பற்றி பன்சிதர் பிதோய் கூறுகையில், ‘‘தனது படங்கள் மூலம் பல நல்ல கருத்துகளை சொன்னவர் அமிதாப் பச்சன். இந்த வயதிலும் பலருக்கு ரோல் மாடல் அவர். குறிப்பாக எனக்கு அவர்தான் குரு. அதனாலேயே அவரை வைத்து பூஜை செய்தோம்’’ என்றார்.