தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

22 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா

மலையாள நடிகை நயன்தாரா, ஹரி இயக்கிய ‘ஐயா’ என்ற படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், அஜித் குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், ரவி மோகன், ஆர்யா, ஜெய் உள்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து தனது சம்பளத்தை பல கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளார். இந்நிலையில், சினிமா கேமரா முன்பு தனது பயணம் தொடங்கி 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை பதிவிட்டுள்ள அவர், ‘நான் கேமரா முன்பு நின்று 22 ஆண்டுகள் ஆகிறது.

அந்த நேரத்தில் சினிமாதான் எனது நிரந்தர வாழ்க்கையாக மாறும் என்று எனக்கு தெரியாது. ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மாடலிங் மூலம் சினிமாவில் நடிக்க வந்த நயன்தாரா, சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில், கடந்த 2003ல் வெளியான ‘மனசினக்கரே’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.