சிக்கலில் இருந்து மீண்ட அனுபமா
மலையாளத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம், ‘ஜேஎஸ்கே’ என்கிற ‘ஜானகி Vs ஸ்டேட் ஆஃப் கேரளா’. இப்படம் கடந்த ஜூன் 27ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டபோது, படத்தின் டைட்டிலில் ‘ஜானகி’ என்ற பெயர் இடம்பெறுவதை சென்சார் அதிகாரிகள் ஆட்சேபித்து, உடனே அதை மாற்றும்படி வலியுறுத்தினர். அதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து சென்சார் குழுவினர், ஜானகி என்ற பெயரின் முன்போ அல்லது பின்போ, ‘வி’ என்ற அந்த கேரக்டருடைய (ஜானகி வித்யாதரன்) தந்தையின் இனிஷியல் இடம்பெறும்படி சேர்த்தால் சான்றிதழ் தருகிறோம் என்றும், கதைப்படி நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணையின்போது, ஜானகி என்ற பெயரை பயன்படுத்தாமல் ‘மியூட்’ செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் தரப்பு, நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்றம், ‘இப்படத்தின் திருத்தப்பட்ட புதிய காப்பியை மீண்டும் எப்போது சென்சார் அதிகாரிகள் பெறுகிறார்களோ, அதிலிருந்து 3வது நாளில் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. படக்குழுவினர் இப்படத்தை மீண்டும் சென்சாருக்கு அனுப்பினர். இதையடுத்து படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், தாங்கள் சொன்ன திருத்தங்களை படக்குழுவினர் செய்திருந்ததை பார்த்து, இப்படத்தை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் விதமாக ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கினர். ஒருவழியாக அனுபமா பரமேஸ்வரன் படத்துக்கான சிக்கல் நீங்கியது. இதையடுத்து வரும் 17ம் தேதி படம் திரைக்கு வருகிறது.