தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆரகன் - திரைவிமர்சனம்

இயக்குநர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா , சிவரஞ்சனி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஆரகன். ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, விவேக் இசையமைத்துள்ளார்.

இளந்திரையன் எனும் இளைஞன் உயிர் பெற்று எழுவதாக ஆரம்பிக்கும் அனிமேஷன் விசுவல்களுக்கு பிறகு கதை துவங்குகிறது. ஆதரவற்ற இளம் பெண்ணாக ஹாஸ்டலில் தங்கி வேலை செய்யும் மகிழினி நிலா( கவிபிரியா) . வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்லது நடக்காதா என ஏக்கத்துடன் காத்திருக்கும் மகிழினிக்கு ஒளியாய் வருகிறார் சரவணன் ( மைக்கேல் தங்கதுரை).

இருவரும் உயிருக்குயிராக காதலிக்கின்றனர். எதிர்காலம் குறித்த பல திட்டங்கள் அதற்கான ஆக்கப்பூர்வமான செயல்கள் என இருவருமே பொறுப்பான வாழ்க்கைக்கு தயாராகிறார்கள். இதற்கிடையில் மகிழினிக்கு ஒரு வயசான அம்மாவை பார்த்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. அதற்கு சம்பளமாகவும் மிகப்பெரிய தொகை கிடைக்க ஒப்புக்கொண்டு கிளம்புகிறார் மகிழினி. தான் கொஞ்சம் அதிகமாக சம்பாதித்தால் தனது காதலனால் சீக்கிரம் தொழில் துவங்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த ஊருக்கு செல்கிறார் மகிழினி.

அங்கே ஆள் அரவமற்ற மலை மற்றும் காட்டுப்பகுதி. தனியாக ஒரு பங்களா. அதில் வயதான, உடல்நிலை சரியில்லாத ஒரு அம்மா (சிவரஞ்சனி);. அவருக்கு பணிவிடைகள் என மகிழினி வாழ்க்கை துவங்குகிறது. நெட்வொர்க் கவரேஜ் இல்லை, இவர்கள் இருவரை தவிர அங்கு வேறு யாருமே இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மகிழினிக்கு வாழ்க்கை விசித்திரமான அனுபவங்களை கொண்டு வருகிறது. கெட்ட கனவுகள் அவர் எதிர்பாராத எதிர்கால ஆபத்துகள் என தொடர்ந்து வரும் கதையில் முடிவு என்ன என்பதுதான் மீதி கதை.

மைக்கேல் தங்கதுரை நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்திருந்தாலும் இந்த கதையில் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் தனக்கு கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார். நடிகை கவிப்பிரியா ஓர் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும். படம் முழுவதுமே மற்ற கதாபாத்திரங்களை விட முகபாவங்களும் அவரது ரியாக்சன்ங்களும் படம் முழுக்க பரவி கிடைக்கிறது. அவரின் அப்பாவியான முகமும் அவருடைய கேரக்டருக்கு மேலும் வலுக்கூட்டி இருக்கிறது.

அமைதியான ஒரு இரவு நேரத்தில் அமானுஷ்யமான ஒரு நாவலை புரட்டிப் படித்தால் எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்குமோ அப்படியான ஒரு அனுபவத்தை கொடுக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். குறிப்பாக இடைவேளை மொமண்ட் நிச்சயம் பார்வையாளனை திடுக்கிட வைக்கும். ஆனால் இடைவேளைக்கு பிறகான காட்சிகளை இன்னும் வேகம் கொடுத்திருந்தால் சுவாரஸ்யம் அதிகமாகியிருக்கும்.

சூர்யா வைத்தி ஒளிப்பதிவில் காடும் மலையும் அதற்குள் ஒரு அழகிய வீடும் என சுற்றி அழகுகள் அதிகம் இருப்பினும், அதற்குள் இருக்கும் ஆபத்தையும் நம் மனதில் புகுத்த தவறவில்லை. அதற்கு பக்க பலமாக விவேக் இசை மேலும் நம்மை அரட்டுகிறது. இதிகாசத்தில் சொல்லப்பட்ட ஒரு சின்ன கரு கதையை எடுத்துக்கொண்டு முழு கதையை உருவாக்கிய விதத்தில் பாராட்டுக்கள்.

எனினும் படத்தின் சுவாரஸ்யத்தில் கமர்சியல் யுக்தியாக ஏதேனும் சேர்த்திருக்கலாம். ஒருவர் கூடவா மகிழினி குறித்து தேட மாட்டார்கள். ஹாஸ்டல் தோழிகள் உடன் படித்த நண்பர்கள் என யாருமே இல்லாமல் ஒருவர் எப்படி இருக்க முடியும். எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில கதாபாத்திரங்களை கொண்டு ஒரு அமானுஷ்ய கதை சொன்ன விதத்தில் இயக்குனர் பளிச்சிடுகிறார்.

மொத்தத்தில் ஆரகன்... கமர்சியல் அல்லது உலக தர சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகச் சாதாரண படமாக கடந்து விடும். ஆனால் அமானுஷ்யம் ,மாந்திரீகம், பில்லி, மற்றும் சூனியம் இவை சார்ந்த கதைகள் நம்பிக்கைகளில் ஆர்வம் உள்ளோருக்கு ஆரகன் திரைப்படம் நிச்சயம் ஏமாற்றம் கொடுக்காது.