ஆரோமலே: விமர்சனம்
மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிஷன்தாஸ், மேலதிகாரி ஷிவாத்மிகா ராஜசேகரின் கரிசனம் கிடைத்து, அவரை ஒருதலையாக காதலிக்கிறார். விருப்பத்தை சொல்லும் கிஷன் தாஸை விட்டு விலகி வெளிநாடு செல்லும் ஷிவாத்மிகா ராஜசேகர், மீண்டும் இந்தியா திரும்புகையில் அவரை சந்திக்கும் கிஷன் தாஸின் நிலை என்ன ஆகிறது என்பது மீதி கதை. காதல் தோல்விகளை சுமந்து, விரக்தியாக வாழ்க்கை நடத்தும் இளைஞனாக கிஷன் தாஸ், பொறுப்புணர்ந்து நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகரிடம் சவால் விடும் அவர், அதில் தோற்ற பிறகு எடுக்கும் முடிவும், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும், கிஷன் தாஸின் எதிர்கால திரை வளர்ச்சிக்கு உதவும். இயல்பான நடிப்பில், தனது அம்மா ஜீவிதாவை ஞாபகப்படுத்துகிறார் ஷிவாத்மிகா ராஜேசேகர்.
ஸ்டில்ஸ் பாண்டியன், துளசி, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், நம்ரிதா ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ள சித்து குமார், சிம்புவின் குரலை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். கவுதம் ராஜேந்திரனின் கேமரா வண்ணமயமாக பதிவு செய்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையின் காதலை அழுத்தமாக திரையில் சொன்ன இயக்குனர் சாரங் தியாகு, முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். இவர், நடிகர் தியாகுவின் மகன். மேட்ரிமோனியல் நிறுவனத்தில் நடக்கும் மறைமுக விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது படம். திடீர் திருப்பங்கள் இல்லை.
