ரஹ்மானை நெகிழவைத்த ஹான்ஸ் ஸிம்மர்
இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், ராவணன் கேரக்டரில் யஷ், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க, 2 பாகங்களாக உருவாக்கப்படும் படம், ‘ராமாயணா’. முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், 2ம் பாகம் வரும் 2027 தீபாவளிக்கும் பல்வேறு மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகிறது. இந்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஸிம்மர் முதல்முறையாக இணைந்து இசை அமைப்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே இந்திய படமான `தங்கல்’ என்ற இந்தி படத்தின் இயக்குனரான நிதேஷ் திவாரி, `ராமாயணா’ படத்தை இயக்கி வருகிறார். நமித் மல்ஹோத்ரா, யஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை, 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் DNEG என்ற கிராபிக்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் அளித்துள்ள பேட்டியில், ‘அதாவது, ‘ராமாயணா’ போன்ற மிகப்பெரிய படத்தில், ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? எங்கள் முதல் சந்திப்பு லண்டனில் சிறப்பாக நடந்தது. அடுத்த சந்திப்பு லாஸ் ஏஞ்சல்ஸிலும், 3வது சந்திப்பு துபாயிலும் நடந்தது. இந்திய கலாச்சாரம் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ஹான்ஸ் ஸிம்மர், விமர்சனத்துக்கு திறந்த மனதுடன் பதிலளித்தார். கதை விவாதத்தில், ‘இதை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. நான் ஒரு மேற்கத்திய கண்ணோட்டத்தை கொண்டு வர முடியுமா?’ என்று வெளிப்படையாக கேட்டார். இப்படத்தில் பணியாற்றுவதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது நம் இந்திய கலாச்சாரம். எல்லாமே நல்லதாக நடக்கும்’ என்றார்.