தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆர்யன் படத்தில் ஆமிர்கான் நடிக்காதது ஏன்?: விஷ்ணு விஷால்

சென்னை: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுப்ரா, ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே எழுதி இயக்கியுள்ள ‘ஆர்யன்’ என்ற படம், வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லரான இதற்கு ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். விஷ்ணு விஷால், ஸ்ரத்தா நாத், மானசா சவுத்ரி, செல்வராகவன், கருணாகரன், சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த், இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசியதாவது:

சக நடிகர்கள் சிலர், இப்போதும் என்னை சரியாக அடையாளப்படுத்தவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. நான் நடித்த ‘கட்டா குஸ்தி’ என்ற படம் 6 தயாரிப்பாளர்களின் கைகளுக்கு மாறியது. ‘எஃப்.ஐ.ஆர்’ என்ற படத்துக்கு 3 தயாரிப்பாளர்கள் மாறினார்கள். `ராட்சசன்’ என்ற படத்துக்கு பிறகு நான் நடிக்க வேண்டிய 9 படங்கள் டிராப் ஆகிவிட்டது. அந்த வலியும், வருத்தமும் எனக்கு இருப்பதால்தான் முழுநேர தயாரிப்பாளராக மாறினேன். நான் நடிக்கும் 5 படங்களை என் நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் மிகவும் நேசிக்கும் சில நடிகர்கள், எனது படம் ரிலீசாகும்போது எனக்கு போன் செய்து வாழ்த்தவும் இல்லை, பாராட்டவும் இல்லை. அந்த படங்கள் நன்றாக ஓடினால், டைரக்டர்களிடம் மட்டும் பேசுவார்கள். ஆனால், எனக்கு ஒரு போன் கூட வராது. சமீபத்தில் சில படங்களை பார்த்தேன். உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து பாராட்டினேன்.

கிரைம் என்றாலே ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுவார்கள்.

அதை தடுக்க முடியாது. நானும் ‘ராட்சசன்’ படத்தை மீறி ஒரு படத்தை உருவாக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், ‘ஆர்யன்’ படத்தில் ரசிகர்களுக்கு நாங்கள் வேறொரு அனுபவத்தை கொடுத்துள்ளோம். இதன் இந்தி வெர்ஷனில் ஆமிர்கான் நடிப்பதாக இருந்தது. கதையை கேட்டு அவர் பாராட்டினார். சில காரணங்களால் அந்த படம் உருவாகவில்லை. இதில் நான் போலீஸ் என்றாலும், நிஜ ஹீரோ செல்வராகவன்தான். எல்லா படத்திலும் முத்தக்காட்சியில் நடிப்பதால், இதில் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆர்யன் என்பது எனக்கும், எனது முன்னாள் மனைவி ரஜினிக்கும் பிறந்த மகனின் பெயர். அவர் பெயரை இந்த படத்தின் மூலம் நான் காப்பாற்ற வேண்டும்.