தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆர்யன்: விமர்சனம்

முன்னணி ஹீரோவை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்கும் டி.வி சேனலின் நேரடி ஒளிபரப்பில் திடீரென்று உள்ளே நுழையும் செல்வராகவன், அடுத்தடுத்து 4 பேரை கொல்லப்போவதாக சொல்லி போலீசை கதிகலங்க வைக்கிறார். ஒவ்வொரு கொலையும் நடப்பதற்கு முன்பு செல்வராகவன் காணொளியில் பேசுகிறார். கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி விஷ்ணு விஷால், கொலையை தடுத்தாரா? செல்வராகவன் கொலை செய்வது ஏன் என்பது மீதி கதை. பரபரக்கும் முழுநீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரை விறுவிறுப்பாக எழுதி இயக்கியுள்ள பிரவீன்.கே, முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்துள்ளார். விஷ்ணு விஷால், காரணத்தை கண்டுபிடித்து கொலையாளியை அவர் அணுகுவதில், போலீசுக்கான கம்பீரத்தையும், மரியாதையையும் சேர்த்திருக்கிறார். கடற்கரையில் நடக்கும் சண்டைக்காட்சியில் பலமாக அடித்து, ஆக்‌ஷனில் அதகளம் செய்துள்ளார். அவருக்கும், மானசா சவுத்ரிக்குமான வாழ்க்கையும், பிரிவும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஸ்ரத்தா ஸ்ரீநாத் அளவாக நடித்துள்ளார்.

கருணாகரன், மானசா சவுத்ரி ஆகியோரை கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம். எழுத்தாளராக வரும் செல்வராகவன், வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்துள்ளார். மாலா பார்வதி, வி.அவினாஷ், வேல.ராமமூர்த்தி உள்பட மற்றவர்களும் நன்கு நடித்துள்ளனர். கிளைமாக்ஸில் இடம்பெறும் கருத்துகளின் மூலம், நிஜம் புலப்பட்டாலும் அதற்காக இப்படியா செய்வது என்ற கேள்வியையும் படம் எழுப்புகிறது. ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை, ஒரு தூண் போல் படத்தை தாங்கி நிற்கிறது. ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. சமூகம் மற்றும் மக்களால் மறக்கப்பட்ட சில நிஜ ஹீரோக்களின் மதிப்பு குறித்து படம் பேசியிருக்கிறது. முற்பகுதி சற்று மந்தமாக நகர்ந்தாலும், பிற்பகுதி அதை சரிப்படுத்தி விடுகிறது.