குற்றம் தவிர்: விமர்சனம்
கணவன் துணை இல்லாமல், ஒரே மகளுடன் இட்லி கடை நடத்தி வரும் வினோதினி வைத்தியநாதன், தனது தம்பி ரிஷி ரித்விக் மீது உயிரையே வைத்திருக்கிறார். தம்பி போலீசாக வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். அப்போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, தம்பியின் லட்சியம் பாதிக்கக்கூடாது என்று, அவருக்கு தெரியாமல் இதய அறுவை சிகிச்சை பெறும்போது இறந்துவிடுகிறார். இதயத்துக்கு பதிலாக கிட்னியை ஆபரேஷன் செய்த டாக்டர் ஆனந்த் பாபுவை பிடித்து அடிக்கும்போது, அந்த மருத்துவமனை பலரை ஏமாற்றி, மாற்று அறுவை சிகிச்சை செய்து கொன்றது தெரியவருகிறது. இதற்கு பின்னால் ஒரு பெரிய கும்பல் இருப்பதை கண்டுபிடிக்கும் ரிஷி ரித்விக், அவர்களை என்ன செய்தார்? அக்காவின் கனவுப்படி போலீஸ் வேலையில் சேர்ந்தாரா என்பது மீதி கதை.
குற்றச்சம்பவங்களை கண்டு கொதிக்கும் ரிஷி ரித்விக், ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார். அக்காவுக்காகவும், அவரது மகளுக்காகவும் பாசத்தில் உருகுகிறார். வினோதினி வைத்தியநாதனின் குணச்சித்திர நடிப்பு சிறப்பு. சிறுமி சாய் சைந்தவி, ஜார்ஜ் விஜய், கான்ஸ்டபிள் ஆராத்யா, அமைச்சர் ‘பருத்திவீரன்’ சரவணன், ரவுடிகள் சாய் தீனா, காமராஜ், சென்ராயன், டாக்டர் ஆனந்த் பாபு ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
கதைக்கான ஒளிப்பதிவை ரோவின் பாஸ்கர் செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மருத்துவமனையில் நடக்கும் மாற்று அறுவை சிகிச்சை, உடல் உறுப்புகள் திருட்டு, சமூக விரோதிகளுடன் அரசியல்வாதிகள் கூட்டணி வைத்து ஊழல் செய்வது என்று, பல படங்களில் பார்த்த சம்பவங்களையே இயக்குனர் கஜேந்திரா படமாக்கியுள்ளார். புதிதாக யோசித்து இருக்கலாம்.