அயோத்தி படத்துக்கு தேசிய விருது தராதது ஏன்? ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சரமாரி கேள்வி
சென்னை: ‘அயோத்தி’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான சில நல்ல படங்களில் அயோத்தியும் ஒன்று. சசிகுமார் நடித்த இந்த படத்தை மந்திரமூர்த்தி என்ற அறிமுக டைரக்டர் இயக்கினார்.
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாக இந்த படம் உருவாகியிருந்தது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அது கிடைக்காததால், சமூக வலைத்தளங்களில் ‘அயோத்தி படத்தை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர்’. ‘இது சமூக ஒற்றுமையை வலியுறுத்துவதால் ஒன்றிய அரசு இதை புறம்தள்ளியுள்ளது’.
‘அயோத்தி படத்துக்கு ஒரு விருதும் தராதது பெரும் அரசியல்தான்’ என்றும் சரமாரியாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் கூறும்போது, ‘அயோத்தி படத்துக்கு தேசிய விருது தராதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார். இது தொடர்பாக அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி கூறும்போது, ‘கவிஞர் வைரமுத்துவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. பார்க்கிங் படமும் நல்ல படம். அந்த படத்துக்கு விருது கிடைத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.