தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சென்னையில் தமிழில் பேசிய பாலகிருஷ்ணா

கடந்த 2021ல் போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான ‘அகண்டா’ என்ற படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘அகண்டா 2: தாண்டவம்’ என்ற படத்தில் மீண்டும் பாலகிருஷ்ணாவை போயப்பட்டி ஸ்ரீனு இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன், வில்லனாக ஆதி பினிஷெட்டி நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 5ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று சென்னைக்கு வந்த பாலகிருஷ்ணா தமிழில் பேசினார். அவர் கூறுகையில், ‘என் சொந்த வீட்டுக்கு வந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். தமிழ்நாடு என் ஜென்ம பூமி. தெலங்கானா என் கர்ம பூமி. ஆந்திரா என் ஆத்ம பூமி.

என் தந்தையும், குருவும், தெய்வமுமான என்.டி.ஆரின் திரையுலக வாழ்க்கை இங்குதான் வளர்ந்தது. எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் என் தந்தை மீது வைத்திருந்த அன்பையும், பாசத்தையும் மறக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் தமிழ்நாட்டின் மீது அதிக அன்பையும், பாசத்தையும் காட்டினார். ‘சிம்ஹா’, ‘லெஜெண்ட்’, ‘அகண்டா 1’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தில் நானும், போயப்பட்டி ஸ்ரீனுவும் இணைந்துள்ளோம். எனக்கும், அவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இரண்டாம் பாகத்தை சீக்வெல் என்று சொல்ல முடியாது’ என்றார்.