தடை அதை உடை விமர்சனம்...
கடந்த 1990களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக இருந்த கே.எம்.பாரிவள்ளல், ஆதிக்க சக்தியை எதிர்த்து போராடி, தன் மகனை படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு தடையாக இருந்தவரை கொல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது ஒரு கதை. இன்றைய கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சோஷியல் மீடியா செய்யும் அதிரடி மாற்றங்கள், பாமர மற்றும் நடுத்தர மக்களை எப்படி பாதிக்கிறது என்பது இன்னொரு கதை.
இரண்டையும் சொல்லி, அதற்கு தடையாக இருப்பவர்களின் ஆதிக்கத்தை உடைத்தெறிய மேற்கொள்ளும் முயற்சிகள் வென்றதா என்பது மீதி கதை. ‘அங்காடித்தெரு’ மகேஷ், உடலில் மட்டுமின்றி நடிப்பிலும் கனம். ‘திருக்குறள்’ குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கவுதமி, சூரிய பிரதாபன், சுபஸ்ரீ ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர்.
தஞ்சை, பட்டுக்கோட்டை மண்ணை தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் கேமரா தரமாக ஒளிப்பதிவு செய்துள்ளது. சாய் சுந்தர் பின்னணி இசையில் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது. நிஜ சம்பவத்தை அறிவழகன் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். சொல்ல வந்த கருத்து சிறப்பானது. அதை திரைமொழியில் சிறப்பாகவும், வலிமையாகவும் சொல்லியிருக்க வேண்டும்.
