பெங்களூருவில் 3 பேர் படுகாயம்; விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய நடிகை: 22 நாட்களுக்கு பிறகு சிக்கினார்
பெங்களூரு: பெங்களூருவில் மூன்று பேர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற வழக்கில், கன்னட நடிகை திவ்யா சுரேஷ் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு, பாயடராயனபுரா பகுதியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி கிரண் என்பவர் தனது உறவினர்களான அனுஷா மற்றும் அனிதா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கருப்பு நிற கார் ஒன்று அவர்கள் வாகனம் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த விபத்தில் கிரண் மற்றும் அனுஷா ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. பின்னால் அமர்ந்து வந்த அனிதாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த கொடூர விபத்து குறித்து 7ம் தேதி பாயடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரின் உரிமையாளர், கன்னட நடிகை திவ்யா சுரேஷ் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரது காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்து 22 நாட்களுக்கு பிறகு திவ்யா சுரேஷ் சிக்கியுள்ளார். அவரிடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
