தமிழில் அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்
வரலாற்று கதை கொண்ட ‘காந்தா’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், பாக்யஸ்ரீ போர்ஸ். இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ள அவர், மிகவும் எதிர்பார்க்கப்படும் பீரியாடிக் படமான ‘காந்தா’ படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். ஸ்பிரிட் மீடியா, வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இதில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி நடிக்கின்றனர். செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். 1950களில் காணப்பட்ட சென்னையின் கலாச்சார பின்புலத்தில் கதை நடக்கிறது. அன்றைய தோற்றம் மற்றும் நடை, உடை, பாவனைகளுக்கு ஏற்ப பாக்யஸ்ரீ போர்ஸின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் விரைவில் வருகிறது. அதாவது, கோலிவுட்டில் நான் அறிமுகமாக சிறந்த படமொன்றை எதிர்பார்த்து காத்திருந்தேன். அது ‘காந்தா’ படத்தில் நிறைவேறியுள்ளது. இதன்மூலம் நான் தமிழ்ப் படவுலகில் அறிமுகமாகிறேன். இது என் திரையுலக வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் என்று சொல்லலாம். திறமையான படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது. அதை நினைத்து பெருமைப்படுகிறேன். படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் உணர்ந்த மாயாஜாலத்தை, தியேட்டரில் பார்வையாளர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.