என் வாழ்க்கையை மாற்றிய பைசன்: துருவ் விக்ரம் பூரிப்பு
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது தொடர்பாக துருவ் விக்ரம் படக்குழுவினர் அனைவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள பதிவில், “பல வருட உழைப்பு, பல மாத படப்பிடிப்பு, ரத்தம், வியர்வை, கண்ணீர்... இவை அனைத்தும் சிந்தி பைசன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தயாரிப்பும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. என் ஆன்மாவை வலுப்படுத்தி, வாழ்நாள் அனுபவத்தை வழங்கியதற்காக நன்றி மாரி செல்வராஜ் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.