உடல் எடை குறித்த கேள்வி: நிருபருடன் கவுரி கிஷன் மோதல்
சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘96‘ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் கவுரி கிஷன். அதில் சிறுவயது ஜானுவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ‘அதர்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று திரைக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘அதர்ஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் ஹீரோவிடம், ‘‘பாடல் காட்சியில் கவுரி கிஷனைத் தூக்கி சுற்றி வருகிறீர்களே? அவர் ரொம்ப வெயிட்டா உடல் எடையுடன் இருந்தாரா? அவரது உடல் எடை என்ன’’ என்ற ரீதியில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதித்யா, ‘‘ரொம்ப வெயிட்டா இல்லை’’ என தெரிவித்திருந்தார்.. அந்த நேரத்தில் கவுரி கிஷன் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் கடந்து சென்றார்.
பிறகு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கவுரி கிஷன், ‘‘நிருபர் தன்னுடைய உடல் எடை குறித்து கேட்ட கேள்வி முட்டாள்தனமானது. யாரிடமும் அந்த கேள்வியை கேட்காதீர்கள்’’ என பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ‘அதர்ஸ்’ படத்தின் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கவுரி கிஷன் மீது அந்த நிருபர் குற்றம் சாட்டினார். இதனால் சம்பந்தப்பட்ட நிருபருக்கும், கவுரி கிஷனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, கவுரி கிஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த நிருபர் கூற, ‘‘நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், அதுபோன்ற கேள்வியை கேட்டதற்கு நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னுடைய எடையை பற்றி தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், என்னை பொறுத்தவரை உங்கள் கேள்வி உருவகேலி செய்தது போல தான் இருந்தது. அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் இடம்பெற்ற என்னுடைய கேரக்டர் பத்தி எதுவும் கேட்கவில்லை. என் உடல் எடைக்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது’’ என்று கவுரி கிஷன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
