ஒரே விஷயத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் சலிப்பு ஏற்படும்: அதிதி ராவ்
மும்பை: சித்தார்த்தை காதல் திருமணம் செய்துள்ள அதிதி ராவ் ஹைதரி, மும்பையில் வசித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டிருந்த அவர், தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது அழகு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: காலை நேர உணவில் எனக்கு இட்லியை மிகவும் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவு வகைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும். மதிய உணவில் அதிகமாக காய்கறிகளை எடுத்துக்கொள்வேன்.
குயினோவா, தால் சாவல் சப்ஜி போன்ற உணவு வகைகள், எனக்கு விருப்பமான மதிய உணவு. இரவு நேர உணவில் புரதம் அதிகமாக எடுத்துக்கொள்வேன். மீன், சூப், சிக்கன் கட்லெட், கபாப் போன்றவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுவேன். எதை சாப்பிட்டாலும் அளவுடன் சாப்பிட வேண்டும். இரவு ஏழு மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது என்பதே அடிப்படையான டயட் பிளான். என் உடலை சீராக வைத்துக்கொள்ள யோகாசனங்கள் செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், ஒருநாள் யோகாசனம், இன்னொரு நாள் நடனம் என்று, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன். இவைகள்தான் எனது சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடற்பயிற்சிகள். வேறு எந்த ரகசியமும் கிடையாது.
