100வது படத்தில் நடிக்கும் சகோதரர்கள்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், ‘ஜித்தன்’ ரமேஷ் என்று அழைக்கப்படுகிறார். சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்துக்கு ‘ஹிட்டன் கேமரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவில் ஷாம்ஹுன், இயக்குனர் வின்சென்ட் செல்வா, அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார், மனோகர், எஸ்.பி.ராஜா, டாக்டர் பி.என்.முகமது பெரோஸ் பங்கேற்றனர். இது ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் 16வது படமாகும். ‘உயிரும், நேரமும் ஒருமுறை போனால் திரும்ப வராது’ என்ற கருத்தை மையப்படுத்தி, அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தை அருண்ராஜ் பூத்தணல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
வி.எஸ்.சஜி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீனிகேத் விஷால் இசை அமைக்கிறார். அருண் சாக்கோ கதை எழுதுகிறார். கிருஷ்ணா தவா, அப்புக்குட்டி நடிக்கின்றனர். ‘ஜித்தன்’ ரமேஷ் கூறுகையில், ‘இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க முடிவானது. விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படம் 99வது படமாகிவிட்டதால், அடுத்து நாங்கள் தயாரிக்கும் 100வது படம் முன்னணி ஹீரோ நடிப்பில் உருவாகிறது. இயக்குனர், ஹீரோவுக்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நானும், ஜீவாவும் கெஸ்ட் ரோலில் நடிப்போம்’ என்றார்.