பன் பட்டர் ஜாம்: திரைவிமர்சனம்
சென்னை: இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உடன் மைக்கேல், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிக்கா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் " பன் பட்டர் ஜாம்".
பெண்களிடம் பேசவே தயங்கும் சந்த்ரு, நண்பன் சரவணனுடன் கல்லூரியில் சேர்கிறார். பெண் பயம் போய் அங்கு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் நந்தினியை பார்த்த உடன் காதல் மலருகிறது. இதில் குழப்பமும் தொடர்கிறது. இதற்கிடையில் சந்த்ருவின் அம்மா லலிதா ( சரண்யா பொன்வண்ணன் ) உமா (தேவதர்ஷினி) ஆகியோர் தங்களது பிள்ளைகளின் வாழ்கையை ஒருங்கிணைக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் எல்லாம் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துகிறது. இக்கால தலைமுறையின் காதல், குழப்பங்கள், பெற்றோர் திட்டங்கள் ஆகியவற்றை கலக்கலாக காமெடியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ராஜு நன்றாக நடித்திருக்கிறார். டைமிங் காமெடி, உணர்வுபூர்வமான காட்சிகளில் சிறந்து விளங்குகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மைக்கேலுக்கும் இது நல்ல வாய்ப்பு. ஆத்யா, பவ்யா இருவரும் காதல், காமெடி, உணர்வு காட்சிகளில் சரியாக வேலை செய்திருக்கிறார்கள். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி போன்றவர்கள் படத்தின் கலகல பகுதியை உறுதி செய்கிறார்கள்.
பெரும்பாலும் காமெடியிலேயே நகரும் படம், இன்றைய தலைமுறையின் மனநிலையை கேள்விக்குட்படுத்துகிறது. காதல், திருமணம், பெஸ்டி, கேர்ள் பெஸ்டி என நட்புக்கும் காதலுக்கும் உள்ள குழப்பங்களை எளிமையாக சொல்லுகிறது.
பாபு குமார் ஒளிப்பதிவும், ஜான் ஆபிரகாம் எடிட்டிங்கும் படத்திற்கு ஒளியும் ஓட்டமும் கொடுத்திருக்கிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படம் முழுக்க இளமைததுள்ளலுடன் செல்கிறது. மொத்ததில் மெசேஜோடு கலகல கலாட்டாவாக எளிமையான கதையைச் சொல்வதில் " பன் பட்டர் ஜாம் " வெற்றி பெற்றிருக்கிறது.