வழக்கு போட்டாலும் மாறியது மனம்: ஓட்டல் உரிமையாளரை நெகிழ வைத்த சிரஞ்சீவி
ஐதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்திய உணவகத்திற்கு எதிரான சட்டப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதை தடுக்க, சமீபத்தில் ஐதராபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவு பெற்றார். இந்த உத்தரவின் அடிப்படையில், சிரஞ்சீவியின் பெயரை பயன்படுத்திய சுமார் 60 நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், ஐதராபாத்தில் உள்ள ‘சிரஞ்சீவி தாபா’ என்ற உணவகமும் அடங்கும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் உரிமையாளரான ரவி தேஜ், சிரஞ்சீவியின் நிர்வாகக் குழுவினரை நேரில் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அப்போது, அவர் தான் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் என்றும், அவர் மீதான அன்பு மற்றும் மரியாதையின் காரணமாகவே இந்த உணவகத்தை தொடங்கியதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். ரவி தேஜின் நோக்கத்தை புரிந்துகொண்ட சிரஞ்சீவி, தனது பெயரை தொடர்ந்து உணவகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பெருந்தன்மையுடன் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ரவி தேஜ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘சிரஞ்சீவியின் நற்பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்படாத வரை உணவகத்தை நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என சிரஞ்சீவி தரப்பு கூறியதாகவும், தற்போது உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
