சென்ட்ரல் ஜாதி படமா? பேரரசு பதில்
சென்னை: ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சென்ட்ரல்’. ஜூலை 18ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர், இயக்குனர் பேரரசு பேசியதாவது: தயாரிப்பாளர் அறிமுகப்படம்.
இது அவர்களுக்கான மேடை. இந்தப்படத்திற்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள். மூணு தயாரிபாளர்களும் வாத்தியார்கள். அவர்கள் உழைப்பில் இப்படத்தை கொண்டுவந்துள்ளனர். இயக்குநர் பாரதி கதை சொல்ல வந்த போதே நெகட்டிவ் பாத்திரம் என்றார், நான் முதலில் யோசித்தேன், ஆனால் கதை கேட்ட பிறகு மிகவும் பிடித்திருந்தது.
முதலில் ஜாதிப்படமோ எனத் தோன்றியது. இது விளிம்பு நிலை மக்கள் கதை தான், ஒரு ஜாதியினர் வலி சொல்லும் கதை தான், ஆனால் இன்னொரு ஜாதியினரை காயப்படுத்தும் கதை இல்லை என்றார். கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார், டிரம்ஸ் சிவமணி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். இப்படத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான காக்கா முட்டை விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார்.