ஆபாச ஏஐ வீடியோ வைரல் போலீசில் சிரஞ்சீவி புகார்
ஐதராபாத்: தனது ஆபாச மார்பிங் வீடியோக்கள் இணையத்தில் பரவுவதாக நடிகர் சிரஞ்சீவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது புகைப்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது போல சித்தரித்து, சில இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை உருவாக்கி பரப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த ஆபாசமான உள்ளடக்கத்தை அந்த இணையதளங்கள் வெளியிட்டு பரப்பி வருவதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் புகாரை அடுத்து, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிஎன்எஸ் மற்றும் பெண்கள் அநாகரிக சித்தரிப்பு (தடை) சட்டம் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோக்களை உருவாக்கியவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணையதளங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதன் மூலத்தைக் கண்டறியவும், அவற்றை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்கவும் டிஜிட்டல் தளங்களுடன் இணைந்து சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது.
