சிரஞ்சீவியுடன் நடிக்கவில்லை: மாளவிகா மோகனன் மறுப்பு
ஐதராபாத்: பிரபாஸின் ராஜாசாப், கார்த்தியின் சர்தார் 2 என பல படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக, இயக்குநர் பாபி கொல்லி இயக்கவுள்ள படத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அது முற்றிலும் வதந்தி என மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தான் சிரஞ்சீவி படத்தில் நடிக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மாளவிகா மோகனன் தனது பதிவில், ‘‘சிரஞ்சீவி சாருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால், பாபி சார் இயக்கும் ‘மெகா 158’ படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
 