தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கிறிஸ்டினா கதிர்வேலன்: விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கவுசிக், பிரதீபா. சாதி மறுப்பு திருமணம் செய்யும் ஒரு ஜோடிக்கு சாட்சி கையெழுத்து போட கவுசிக், பிரதீபா இருவரும் தங்கள் அடையாள அட்டைகளை கொடுக்கின்றனர். அதை தவறுதலாக மாற்றி கவுசிக், பிரதீபாவுக்கு திருமணம் நடந்ததாக வழக்கறிஞர் அலெக்ஸ் பாண்டியன் பதிவு செய்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகள், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது மீதி கதை. காதலுக்காக ஏங்கி, காதலிக்காக உருகி, யதார்த்தமாக நடித்துள்ளார் கவுசிக்.

இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரதீபா, கிறிஸ்டினா கேரக்டராகவே மாறியுள்ளார். அவரது கண்களே பேசி நடித்துவிடுகிறது. மற்றும் அருள் டி.சங்கர், சில்மிஷம் சிவா, சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, சஞ்சய், அலெக்ஸ் பாண்டியன், ஜெயகுமார் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். கதைக்கேற்ற ஒளிப்பதிவில் பிரஹத் முனியசாமி தனி முத்திரை பதித்துள்ளார். படத்தின் இன்னொரு ஹீரோ, இசை அமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன். பின்னணி இசையில் கூடுதல் பலம் சேர்த்துள்ளார். எடிட்டர் லோகேஷ்வர் பணியும் பாராட்டுக்குரியது. இது பழைய காதல் ரகம் என்றாலும், கிளைமாக்சை மாற்றி யோசித்து, கவனத்தை ஈர்த்துள்ள இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், பல காட்சிகளை மேலோட்டமாக அணுகியிருப்பது நெருடுகிறது.