நகைச்சுவை கலாட்டாவாக உருவாகும் ரௌடி மற்றும் கோ
சென்னை: ரசிகர்களுக்கு தரமான படங்களை தயாரித்து வழங்கி வரும் ஃபேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி மற்றும் கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த், ராசி கண்ணா முதன்மை வேடத்தில் நடிக்க சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி மற்றும் சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ‘தனி ஒருவன்’ புகழ் வம்சி வில்லனாக நடித்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து ரேவா இசை அமைத்துள்ளார்.
முன்னதாக சித்தார்த் நடித்த ‘டக்கர்’ என்ற படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இம்முறை ரொமாண்டிக் காமெடி கதையுடன் களமிறங்கி உள்ளது இந்த கூட்டணி. உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை ரெளடி மற்றும் கோ’ அழைத்து செல்ல இருக்கிறது. இதன் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும் உத்திரவாதம் அளிக்கிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் போஸ்ட் புரடக்சன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான் இந்திய அளவில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பேசும்போது, ‘‘ரவுடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் பற்றிய கதை என்பதால் ரெளடி மற்றும் கோ’ என்பதை தலைப்பாக தேர்வு செய்தோம். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த எண்டர்டெயினர் படமாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
