சினிமா துறையில் 33 ஆண்டுகள் நிறைவு; என் சுய லாபத்திற்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்: அஜித் குமார் பரபரப்பு அறிக்கை
சென்னை: கடந்த 1993ம் ஆண்டு ‘அமராவதி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித் குமார், தற்போது திரைத்துறையில் 33 ஆண்டுகளை கடந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். அதை கொண்டாடும் எண்ணம் எனக்கில்லை. எண்களின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. இந்தப் பயணம் எனக்கு எளிதாக எப்போதும் இருந்ததில்லை. எந்த பின்புலம் அல்லது யாருடைய சிபாரிசும் இல்லாமல் முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன். உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.
மோட்டார் ரேஸிங்கில் இறங்கினேன். அதற்கு தேவை மரியாதை, கவனம், மனஉறுதி மட்டுமே. அந்த டிராக்கில் பலமுறை விபத்தில் சிக்கியுள்ளேன். இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுக்காகவோ, தலைப்பு செய்திக்காகவோ அல்ல. ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக மட்டுமே. ‘அஜித்குமார் மோட்டார் ரேசிங்’ என்ற பெயரில் 2025ம் ஆண்டு மீண்டும் ரேஸிங் துறையில் நுழைந்து வயது வரம்பு, அச்சம், தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுத்து வருகிறேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.
சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நன்றி. எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். என் வாழ்வின் முக்கிய பலம் என் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார்.
என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். மறைந்த என் தந்தை பி.எஸ்.மணி மற்றும் என் அம்மா மோகினி மணி. என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி. உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.