தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரியும் பசுபதி விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். ஓய்வு பெற்றவுடன் வரும் பணத்தை வைத்து தனது பேரனுக்கு ஆபரேஷன் செய்ய திட்டமிடுகிறார். அந்த சமயத்தில் அவரது பக்கத்து வீட்டில் உள்ள மெர்சி என்ற சிறுமி காணாமல் போகிறார். மேலும் அந்த பகுதியில் இரண்டு சிறுமிகள் ஏற்கனவே காணாமல் போய் உள்ளனர். இதனை போலீசார் விசாரணை செய்கின்றனர். ஆனால் மெர்சி காணாமல் போனதற்கும் பசுபதிக்கும் ஒரு தொடர்பு இருப்பது பின்னால் தெரிகிறது. இறுதியில் அந்த சிறுமிக்கு என்ன ஆனது? யார் இதனை செய்தார்கள்? போலீசார் இதனை கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதே குற்றம் புரிந்தவன் சீரிஸின் கதை.

இயக்குனர் செல்வமணி முனியப்பன் முதல் 2 எபிசோடுகளில் திரைக்கதையை மெதுவாக நகர்த்தி செல்கிறார். ஆனால் 3வது எபிசோடில் திருப்பங்களை கொண்டு வந்து, 4 முதல் 7வது எபிசோடு வரை பரபரப்பான க்ரைம் திரில்லரை வழங்கியதில் அசத்தலான எழுத்து பணி செய்திருக்கிறார். பசுபதி தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை இந்த வெப் தொடரில் மீண்டும் நிரூபித்துள்ளார். பசுபதியின் மனைவியாக வரும் லிஸி ஆண்டனியும் நிறைவான நடிப்பு தந்துள்ளார். காவல்துறையில் டிரைவராக பணிபுரியும் விதார்த் இயல்பாக நடித்திருக்கிறார்.

மெர்சியின் அம்மாவாக வரும் லட்சுமி பிரியா சந்திர மௌலிக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதனை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். மேலும் படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட நன்றாக நடித்திருந்தனர். எபிசோடுக்கு எபிசோடு திணிக்காத டிவிஸ்ட்கள் கதையோடு பின்னிப் பிணைந்து வருவது விறுவிறுப்பை கூட்டுகிறது. கொலைகாரனுக்கு பசுபதியின் ரகசியங்கள் எப்படி தெரிந்தது என்பதற்கு பதில் இல்லை. மொத்தத்தில் இந்த வெப்சீரிஸ், கண்டிப்பாக பார்க்க வேண்டியது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.